தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் துவங்கிவிட்டது. இந்த கூட்டத்தில் 2 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரை, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக செய்திகள் வெளியானது.
மேலும், 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என தொண்டர்களுக்கு விஜய் ஆலோசனை வழங்கவுள்ளார் என சொல்லப்பட்டது. மேலும், 500 பேருக்கு காலை உணவும், 2500 பேருக்கு மதிய உணவும் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், பொதுக்குழு தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுக்குழு கூட்டத்தின் முதல் வரிசையில் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும், அம்மா ஷோபாவும் இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவர்களும் இன்று காலையிலேயே அங்கு வந்துவிட்டார்கள். விஜயும் அவர்களி அருகில் சென்று வரவேற்றார். கூட்டம் துவங்கியதும் தவெக பொதுக்குழு உறுப்பினர்களுடன் நெஞ்சில் கை வைத்து உறுதி மொழி ஏற்றார் விஜய்.
இந்த பொதுக்குழுவில் இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் ஊழல், தொகுதி மறுவரையறை, பரந்தூர் விமான நிலையம், சாதி வாரிக் கணக்கெடுப்பு போன்ற 17 தீர்மானங்கள் தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருக்கிறது. மேலும், பூத் கமிட்டி மாநாடு, விஜயின் சுற்றுப்பயண தேதி குறித்தும் அறிவிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2026 ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.