தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பாஜக தலைவருக்கான தேர்தலில் இவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஜனநாயகப்படி தேர்தல் வைத்து தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என பாஜக சொல்லிக்கொண்டாலும் நயினார் நாகேந்திரன்தான் தமிழக பாஜக தலைவர் என அமித்ஷா முடிவு செய்துவிட்டார். அதனால்தான் அவரை தவிர வேறு யாரும் அந்த பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்கிறார்கள்.
கடந்த சில வருடங்களாக அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றி வந்தார். திமுகவின் ஊழல்கள் பற்றி தொடர்ந்து பேசி வந்தார். எதிர்கட்சி தலைவர் இவரா இல்லை பழனிச்சாமியா என்கிற தோற்றத்தை உருவாக்கும் அளவுக்கு அண்ணாமலையின் செயல்பாடுகள் இருந்தது. ஆனால், அதிமுக தலைவர்கள் பற்றி அவதூறாக பேசி பழனிச்சாமியின் கோபத்திற்கு ஆளானார். அவரால்தான் அதிமுக – பாஜக கூட்டணியே உடைந்து போனது.
அதோடு, மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி சேர்வதில் அண்ணாமலைக்கு விருப்பமே இல்லை. இதை அவர் அமித்ஷாவிடம் சொல்லியும் ஒன்றும் நடக்கவில்லை. அண்ணாமலையை மாற்ற வேண்டும் என பழனிச்சாமியும் அமித்ஷாவிடம் சொன்னதை அவரும் ஏற்றுகொண்டார். இப்போது நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக மாறியிருக்கிறார்.
இந்நிலையில், இது தொடர்பான விழாவில் பேசிய தமிழிசை சவுந்தர்ராஜன் ‘நெல்லையில் இருந்து திமுகவிற்கு ஒரு தொல்லை புறப்பட்டு வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். திமுக கூட்டணிக்கு நயினார் நாகேந்திரன் சிம்ம சொப்பனமாக இருக்கப்போகிறார். தாமரை மலர வேண்டும் என்கிற நமது சொப்பனத்தையும் அவர் நிறைவேற்றப்போகிறர்’ என பேசியிருக்கிறார்.