தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. எனவே, அரசியல்கட்சிகள் இப்போதே தேர்தலை சந்திக்கும் வேலையில் இறங்கிவிட்டன. குறிப்பாக யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்கிற ஆலோசனைகள் துவங்கிவிட்டது. ஆனால், இப்போதைக்கு அது எல்லாமே திரைமறைவில் மட்டுமே நடந்து வருகிறது.
சட்டமன்ற தேர்தல் என்பது 5 வருடங்களுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. எனவே, மு.க.ஸ்டாலின் முதல்வராக பதிவியேற்று ஆட்சியை நடத்தி வருகிறார். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று 4 வருடங்கள் ஓடிவிட்டது.
ஒருபக்கம், அதிமுக இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அதிமுக இப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது. விஜய் ஒரு பக்கம் கட்சியை துவங்கி 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்திருக்கிறார். அவர் யாருடனெல்லாம் கூட்டணி அமைப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திமுகவை தோற்கடிப்பார் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். விஜய் கூட்டணி அமைப்பாரா இல்லை தனியாக போட்டியிடுவாரா என்பது போகப்போகவே தெரியவரும். இந்த நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருப்பதால் பல முக்கிய விஷயங்கள் இதில் விவாதிக்கப்படவிருக்கிறது. தமிழகத்தில் பதிவு பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன. 18 வயதை அடைந்தவரை வாக்களார் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது.