முன்னாள் டிஜிபியின் மனு! நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த தமிழக அரசு!

Photo of author

By Sakthi

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை உள்ளிட்டவற்றை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாமதப்படுத்த முயற்சி செய்வதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார், அவர் மீதான புகாரை விசாரணை செய்ய கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ விவேகானந்தன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், இந்த விசாரணை குழு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் விசாரணை குழுவில் இடம் பெற்றிருக்கின்ற கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், அருண்மொழி உள்ளிட்டோர் தனக்கு எதிராக ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார்கள் என்ற காரணத்தால், இருவரையும் இந்த குழுவில் இருந்து நீக்கவேண்டும் என உள்துறை செயலாளருக்கு மனு வழங்கியதாகவும், இந்த மனு பரிசீலிக்க படுவதற்கு முன்னரே விசாரணை ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் ராஜேஷ் தாஸ் கூறியிருந்தார்.

அதோடு இந்த வழக்கின் சாட்சியங்கள் பலர் புகார் வழங்கிய பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கீழே பணிபுரிபவர்கள் என்ற காரணத்தால், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று நான் அளித்த மனுவும் ஏற்கப்படவில்லை என குறிப்பிட்டு சொல்லியிருந்தார் ராஜேஷ் தாஸ்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்த சமயத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தரப்பில் விசாரணை ஆணையம் விசாரித்த சாட்சிகளுடைய வாக்குமூலத்தின் அறிக்கை கொடுக்கப் படவில்லை எனவும், ஒருதலைபட்சமாக விசாரணை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதில் தெரிவித்து ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இந்த வழக்கில் முன்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பாலியல் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற தெரிவித்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு செய்துவிட்டது, இதைத்தவிர ஆணையத்தில் இடம்பெற்ற இருக்கக்கூடிய அருண் என்ற அதிகாரியும் மாற்றப்பட்டு இருக்கிறார் என கூறியிருக்கிறார் சண்முகசுந்தரம்.

அதோடு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தனக்கு எதிரான விசாரணையை வேண்டுமென்றே காலதாமத படுத்த முயற்சி செய்து வருகின்றார் எனவும், இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதனை விசாரணை செய்த நீதிபதி சரவணன் கமிட்டியின் விசாரணை ஏற்கனவே இருக்கின்றவாறு நீடிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கு குறித்த பதிலை தமிழக அரசு இரண்டு வார காலத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருக்கிறார்.