பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.
ஹைட்ரா கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களினால் வேளாண் நிலங்கள் நாசமாவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்படும் என சேலம் மாவட்டம், தலைவாசலில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்தார்.
இதையடுத்து, வேளாண் மண்டலங்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதற்கான சட்ட மசோதாவையும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது விவசாயிகளிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.
அதில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட நிலங்களை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அதிக விளைச்சலை காணும் பொருட்டு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாகுபடி செய்து கொள்ளலாம் என்றும் வேளாண்துறை சம்பந்தப்பட்ட தொழில்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படும் என்றும் விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.