பல வருடங்களாக இருந்தாலும் கடந்த சில வருடங்களாக மக்களிடம் அதிகம் பிரபலமாகி வரும் உணவு மையானைஸ். முட்டையின் வெள்ளைக்கருவில் எண்ணெய் மற்றும் சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் இது தமிழ்நாட்டே உணவே கிடையாது. ஆனால், கடந்த சில வருடங்களில் மையோனைஸ் பல உணவகங்களிலும் பறிமாறப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஃபிங்கர் சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொறிக்கும் உணவுகளுடன் மையோனைஸ் கொடுக்கப்படுகிறது. அதிலும், கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன் போன்ற உணவுகளை உண்ணும்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மையோனைஸை உட்கொள்கிறார்கள். மையோனைஸை சரியான முறையில் தயாரிக்கவில்லை என்றால் அது உடலுக்கு கேடு விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதோடு, அதில் அதிகப்படியான எண்னெய் சேர்க்கப்படுவதால் இதை சாப்பிடுபவர்களின் உடலில் கொழுப்பு கூடுவதாகவும் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
அதோடு, கடந்த சில வருடங்களில் மையோனைஸை சாப்பிட்டு சிலர் இறந்தும் போனார்கள். இந்நிலையில்தான், தமிழகத்தில் ஒராண்டுக்கு மையோனைஸ் உணவுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிக்கிறது.
இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக இந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசிதழில், ஏப்ரல் 8ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தெலுங்கானாவில் மையோனைஸுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.