பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் புதிய முறையில் தேர்ச்சி வழங்கலாமா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை அரசு பல கட்டங்களாக நீட்டித்து கொண்டே வருகிறது.
இதனையடுத்து பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்வதாக தமிழக அரசு முடிவு செய்தது. மேலும் இத்துடன் நின்றுபோன பிளஸ் 1 இறுதி நாள் தேர்வையும் தமிழக அரசு ரத்து செய்து அறிவித்தது.
இவ்வாறு தேர்வை ரத்து செய்ததால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்தும் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும், அவர்களின் வருகை அடிப்படையில் மீதமுள்ள 20 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக குற்றசாட்டு எழுந்ததின் அடிப்படையில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட பள்ளிக்கல்வித்துறை புதிய முறையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளபடி மதிப்பெண் வழங்குவதற்கு பதிலாக ஏ, பி, சி என்ற கிரேடு முறையில் தேர்ச்சி வழங்கலாமா? என்பது பற்றி ஆலோசனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் ஆலோசனைக்கு பிறகு இந்த திட்டம் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதன் பிறகு தமிழக முதல்வரின் ஒப்புதல் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது.