பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசு?

Photo of author

By Parthipan K

பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசு?

கொரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் மே மாதம் 17ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மே 17ம் தேதியிலிருந்து 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து சேவையை இயக்க தமிழக அரசு தயாராகிவருகிறது.

இந்நிலையில் மீண்டும் பேருந்து போக்குவரத்து சேவையை தொடரும்போது, பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் சென்னை, விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை உள்பட 8 கோட்டங்கள் மூலம் 23 ஆயிரத்துக்கும் அத்திமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள் உள்பட சுமார் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் பணியாளர்களாக உள்ளனர்.

இந்த பேருந்துகளால் மாதம் ஒன்றுக்கு சுமார் 850 கோடிக்கு மேல் வருமானமாகக் கிடைக்கிறது. இதில் தொழிலாளர்கள் சம்பளத்திற்கு 450 கோடியும், மீதி தொகை எரிபொருள், உதிரிபாகங்ககள் வாங்குவதற்கான செலவு, சுங்க வரி, சாலை வரி உள்ளிட்ட செலவுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளும் பணிமனைகளில் முடங்கி உள்ளது. இதனால் இதுவரை சுமார் 1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கான ஒவ்வொரு மாதமும் சம்பளம் 450 கோடி தேவைப்படும் நிலையில் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பால் தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைச் சரி செய்ய மத்திய அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு நிதி அளிக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு, மதுபானங்கள் விலை உயர்வு, அரசு ஊழியர் ஓய்வு வயது உயர்வு என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில், ஊரடங்கின் போது, ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய ஊரடங்கு முடிந்து பேருந்து போக்குவரத்து துவங்கும் போது, பேருந்து கட்டணத்தை உயர்த்த, அரசு ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பினை அரசு விரைவில் வெளியிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.