தமிழக அரசிற்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் ஒரு நிறுவனமாக டாஸ்மாக் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இது எம்ஜிஆர் காலம் தொட்டு நிகழ்ந்து வரும் ஒரு செயலாகும். எம்ஜிஆர் காலத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக முதன்முதலாக அரசாங்கம் சார்பாக டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்டது.
அப்படி தொடங்கப்பட்ட இந்த டாஸ்மாக் நிறுவனம் தற்போது தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் விழுது விட்டு இருக்கிறது. ஆனால் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிந்து விட்டது என்றுதான் நினைத்திருக்கிறார்கள். இருந்தாலும் ஆங்காங்கே இன்னமும் கள்ளச்சாராயம் விற்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது
ஆனால் அரசாங்கமே உரிமத்துடன் நடத்தும் இந்த டாஸ்மாக் நிறுவனத்தால் தமிழகத்தில் பல குடும்பங்கள் தெருவில் நிற்கிறது என்றால் அது மிகையாகாது. அரசாங்கம் எப்பொழுதும் தனக்கு வரக்கூடிய வருமானத்தை மட்டுமே பார்க்கிறதே ஒழிய இதனால் தமிழக மக்கள் சந்திக்கும் இன்னல்களை தமிழக அரசு எப்போதும் கண்டு கொண்டது கிடையாது.
இந்த நிலையில், டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் எல்லா முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் அனைத்து மண்டல சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அந்த சுற்றறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்கள் பார்க்குமாறு விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் ஒட்டு மொத்த விற்பனை செய்யக் கூடாது அப்படி விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வாடிக்கையாளர்களுக்கு சரியான ரசீது வழங்க வேண்டும். இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என மாவட்ட மேலாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்ததோடு இதனை கடைபிடிக்காத ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் வழக்கு ஒன்றில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக விற்பனை செய்பவர்களிடம் வாங்கி விற்பனை செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மது விற்பனையை ஒட்டுமொத்தமாக செய்வது தெரியவந்தால் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர்.