மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி – 3 நாட்களுக்கு விடுமுறையாம்..!

Photo of author

By CineDesk

சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நாட்கள் நெருங்கி வர அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் மாநில தேர்தல் ஆணையம் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தி வருகிறது. தேர்தல் நேரங்களில் வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், வாக்குப்பெட்டி உள்ள அறைக்கு முழு பாதுகாப்பு அளிக்கவும், தேர்தல் நேரத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

தமிழக காவல்துறையினர் மட்டுமின்றி தேர்தல் பணியில் முழு பாதுகாப்பு அளிக்கும் விதமாக துணை ராணுவப்படையினர் தமிழகம் விரைந்தனர். அசம்பாவிதங்கள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டும் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்த நடவடிகை மேற்கொண்டு வருகிறது தமிழக தேர்தல் ஆணையம். இந்த நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணியின் ஒரு நடவடிக்கையாக 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை அமைதியாகவும், நியாயமாகவும் நடத்துவதை உறுதிபடுத்தும் விதமாக வரும் 4-ம் தேதி காலை 10 மணி முதல் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட இந்த நாட்களில் மதுபானங்களை பதுக்கி வைத்தாலோ, விற்றாலோ, கடத்தினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதேபோன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நாளான மே 2-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.