மாற்றுத்திறனாளி வாங்கிய நான்கு சக்கர வாகனத்திற்கு வரி விலக்கு அளிக்க நீதிமன்றம் உத்தரவு
மாற்றுத்திறனாளி வாங்கிய நான்கு சக்கர வாகனத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
புதுக்கோட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி அங்கப்பன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், “தனது புதிய மாருதி சுசுகி காரை பதிவு செய்வதோடு, தான் மாற்றுத்திறனாளி எனும் அடிப்படையில் வரி விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா,” கூறியுள்ளதாவது
இந்த மனுதாரர் மாற்றுத்திறனாளியாக உள்ள நிலையில், அதற்கான தமிழக அரசின் பிரத்தியேக அடையாள அட்டையையும் வைத்துள்ளார். மனுதாரர் வர்த்தக பிரிவில் பட்டம் பெற்றுள்ளதோடு தேசிய அளவிலான செஸ் விளையாட்டிலும் விளையாடி உள்ளார். இவர் மாருதி சுசுகி வண்டியை வாங்கி உள்ளார். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக இருக்கை வசதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
1976 ஆம் ஆண்டு தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு வரி விலக்கு அளிப்பது தொடர்பாக முடிவு எடுத்தது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து அலுவலரிடம் மனுதாரர் வரிவிலக்கு கோரியுள்ளார். ஆனால் புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து அலுவல ர் மனுதாரர் வாகனத்தை இயக்க முடியும் என்பதை உறுதி செய்யும் விதமாக சான்றிதழ், உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கேட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த வரி விலக்கு மாற்றுத்திறனாளிகளால் அந்த வாகனத்தை இயக்க முடிந்தாலும் அல்லது அவர்களுக்காக என அந்த வாகனம் பயன்படுத்தப்பட்டாலும் பொருந்தும் என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் இந்த வரி விலக்கு தொடர்பான வழிகாட்டுதல்களை மோட்டார் வாகனங்களுக்கு மட்டும் என தவறாக புரிந்து கொண்டுள்ளனர். வரி விலக்கிற்கான எந்த விதியிலும் அந்த வாகனம் கண்டிப்பாக மாற்றுத்திறனாளியே இயக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கான வரி விலக்கு அந்த வாகனம் அவர்களால் இயக்கப்பட்டாலோ, அல்லது அது போன்ற நபர்களுக்காவென இயக்கப்பட்டாலோ வழங்கப்பட வேண்டும் என்பதை விதிகள் உறுதி செய்கிறது.
ஆகவே இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரது வாகனத்தை பதிவு செய்வதோடு, முறையான வரி விலக்கை அளிக்க உத்தரவிடப்படுகிறது. அதோடு மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் வரி விலக்கு வழங்குகையில் இந்த விதிகளை முறையாக நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.