மோடியை விமர்சித்து பள்ளி மாணவர்கள் நாடகம்: பள்ளி தலைமையாசிரியர் கைது!

Photo of author

By Parthipan K

மோடியை விமர்சித்து பள்ளி மாணவர்கள் நாடகம்: பள்ளி தலைமையாசிரியர் கைது!

பிரதமர் மோடியை மோசமாக சித்தரித்து பள்ளி நாடகம் ஒன்று நடத்தியதாக பள்ளி தலைமையாசிரியரும் மாணவன் ஒருவனின் தாய் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள  பிதரில் அமைந்துள்ள ஷாஹீன் பள்ளியில் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களை வைத்து நாடகம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியை மோசமாக விமர்சித்துள்ளதாக கண்டனங்கள் எழுந்தன.

இதுகுறித்து நீலேஷ் ரக்ஷியால் என்பவர் அளித்த புகாரில் ‘சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி நடைமுறைப்படுத்தப்பட்டால்  முஸ்லீம்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்பது போல அந்நாடகம் சித்தரிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு எதிரான சொற்கள் ஸ்கிரிப்டில் இல்லாத போதும் அதுசம்மந்தமாக ஒரு மாணவனின் தாயாரும் பள்ளித் தலைமை ஆசிரியையும் அதை ஒத்திகையின் போது சேர்த்துள்ளனர். இந்நாடகம் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு வைரலானது.’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சம்மந்த பட்ட மாணவனின் தாய் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதுக்கு பொதுமக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ளது.