செல்போனுக்காக படுகொலை செய்யப்பட்ட வாலிபர்! திருப்பூரில் பயங்கரம்!

Photo of author

By Sakthi

மயிலாடுதுறை மாவட்டம் போனேரிராஜபுரத்தை சார்ந்தவர் மகாலிங்கம் இவருடைய மகன் சுரேஷ்குமார் இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இவர் திருப்பூரில் ஒரு எம்ராய்டிங் நிறுவனத்தில் தங்கி அங்கேயே பணிபுரிந்து வந்தார். இவருடன் திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் ரஞ்சித் என்பவரும் வேலை செய்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

ஒரே நிறுவனத்தில் 2 பேரும் வேலை செய்ததால் நண்பர்களாக பழகி வந்தார்கள். நேற்று முன்தினம் விடுமுறை என்ற காரணத்தால், சதீஷ்குமாரும், ரஞ்சித்தும், செரங்காடு காட்டுப்பகுதிக்கு இரவு மது அருந்துவதற்காக சென்றார்கள்.

அப்போது அங்கே நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் அவர்களை வழிமறித்து கைபேசி மற்றும் பணத்தை கொடுக்குமாறு மிரட்டியிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் கொடுக்க மறுத்து விடவே அந்த கும்பல் அவர்கள் 2 பேரையும் கடுமையாக தங்கியிருக்கிறார்கள்.

அந்த கும்பல் ரஞ்சித்தை ஆயுதத்தால் தாக்கி வயிற்றில் கத்தியால் குத்தியிருக்கிறார்கள். இதனால் ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து தப்பி வந்த ரஞ்சித் ஒரு நிறுவனம் முன்பு விழுந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் நல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரஞ்சித்தை மீட்டு அவசர ஊர்தியில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

அப்போது ரஞ்சித் காவல்துறையினரிடம் என்னை கத்தியால் குத்திய கும்பல் என்னுடைய நண்பர் சதீஷ்குமாரை பிடித்து வைத்து தாக்குகிறது. அவரை வழிப்பறிக் கும்பலிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து சதீஷ்குமாரை மீட்பதற்காக காவல்துறையினர் அங்கிருக்கின்ற காட்டுப்பகுதிக்கு சென்றார்கள்.

அப்போது அங்கே அவர்கள் கண்ட காட்சி காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்தது, சதீஷ்குமார் உடல் மட்டும் கிடந்தது அவருடைய தலையை காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

வழிப்பறி கும்பல் சதீஷ்குமாரிடமிருந்து கைபேசி மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு அதன் பிறகு அவருடைய தலையை துண்டித்து படுகொலை செய்து உடலை அங்கேயே போட்டு விட்டு தலையை கொண்டு சென்றுவிட்டது என்பது தெரியவந்தது.

ஆகவே இதனை தொடர்ந்து சதீஷ்குமார் தலையை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டார்கள், ஆனாலும் நள்ளிரவு நேரம் ஆகிவிட்டபடியால் தேடுதல் பணியை காவல்துறையினர் கைவிட்டார்கள்.

அதன்பிறகு சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். நேற்று இரவு வரையிலும் சதீஷ்குமார் தலை கிடைக்கவில்லை,

இந்த கொடூர கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வழிப்பறி கொள்ளை கும்பலை சார்ந்த கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.