எங்களை பிச்சைக்காரர்கள் போல் நடத்துவதா? – மத்திய அரசு மீது வெகுண்டெழுந்த முதல்வர்!

Photo of author

By Parthipan K

கொரோனா ஊரடங்கால் மாநிலத்தின் பொருளாதார நிலை மிகவும் பாதிப்படைந்துள்ள நிலையில் அனைத்து மாநில அரசும் மத்திய அரசிடம் நிதி கேட்டு வருகிறது.

மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி பங்கை தராமல் மத்திய அரசு இழுத்தடித்து வரும் நிலையில் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். இதுவரை ஐந்து கட்டங்களாகத் சுயசார்பு பொருளாதாரத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மாநிலங்களை பிச்சைக்காரர்கள் போல் மத்திய அரசு நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார் தெலுங்கானா முதல்வரான சந்திரசேகர ராவ்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்

“மத்திய அரசு அறிவித்த சுயசார்பு பொருளாதாரத் திட்டம் உண்மையான மோசடித் திட்டம். வெறும் எண்களை மட்டும் கூறி மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் துரோகம் விளைவிக்கிறது.

மாநில அரசுகள் கடன் பெறுவதற்கு நகைப்புக்குரிய கட்டுப்பாடுகளைக் கூறி மத்திய அரசு தன்னுடைய மரியாதையைத் தானே குறைத்துக்கொள்கிறது.

சர்வதேச பத்திரிகைகள் எல்லாம் மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பைப் பார்த்துக் கிண்டல் செய்கின்றன.

நிதியமைச்சர் உண்மையாகவே GDPயை உயர்த்தத் திட்டமிடுகிறாரா அல்லது ரூ.20 லட்சம் கோடி எண்களை அடைவதற்காக அறிவிப்புகளை வெளியிடுகிறாரா என்று கேட்கிறார்கள்.

இக்கட்டான இந்த நேரத்தில் பொருளாதார நிதித்தொகுப்பு மாநிலங்களுக்கு மிகவும் அவசியமானது. ஆனால், மத்திய அரசின் மனப்போக்கு நிலப்பிரபுத்துவ கொள்கை போலவும், எதேச்சதிகார மனப்போக்கையுமே பிரதிபலிக்கிறது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற திட்டங்களை நாங்கள் கேட்கவில்லை.

கொகரோனா நோய்த்தொற்று பாதிப்பால் மாநில அரசுகளின் நிதி நிலைமை மிக மோசமாக இருக்கும் போது, மக்களுக்குத் தேவையான உதவிகளையும், திட்டங்களையும் செய்யவே நாங்கள் மத்திய அரசிடம் இருந்து நிதி கோருகிறோம்.

நாங்கள் உங்களிடம் பணம் கேட்டால், நீங்கள் எங்களைப் பிச்சைக்காரர்கள் போல் நடத்துவீர்களா? மத்திய அரசு என்ன செய்கிறது? எனக் கேட்கிறேன். இந்தியாவில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் முறை இதுதானா?

மாநிலங்கள் தங்கள் நிதிப்பொறுப்பு மற்றும் நிதிநிலை மேலாண்மையில் 2 சதவீதம் கூடுதலாகக் கடன் பெற மத்திய அரசு அனுமதித்துள்ளது.

அப்படியென்றால் தெலங்கானாவுக்கு ரூ.20 ஆயிரம் கோடி மட்டும் தான் கிடைக்கும். இந்தக் கடனை வாங்குவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நகைப்பாக உள்ளன. இந்தக் கடனை வாங்கினால் செலுத்துவது மாநிலங்கள்தானே!.

மத்திய அரசு அறிவித்தது பொருளாதார ஊக்குவிப்பு திட்டமா? .என்ன இது? இதைப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் என அழைக்க முடியாது.

கூட்டாட்சி முறையில் இதுபோன்ற கொள்கையைப் பின்பற்ற முடியாது. இப்படி நீங்கள் அறிவித்தால் மாநில அரசுகள் எதற்கு? அரசியலமைப்புச் சட்டப்படிதான் மாநில அரசுகள் இயங்குகின்றதே தவிர உங்களுக்குக் கீழ் இயங்கவில்லை.

கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்க்கும் விதமாக மத்திய அரசு செயல்படுவதும், மாநில அரசுகளைக் கட்டுப்படுத்த நினைப்பதும் வேதனையாக இருக்கிறது. பிரதமர் மோடி கூட்டாட்சி குறித்துப் பேசுகிறார். ஆனால், எல்லாம் போலித்தனமாகவும், வெறுமையாகவும் இருக்கிறது” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.