தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்! இன்று வாக்குப்பதிவு தொடங்கியது!!
ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் இன்று(நவம்பர்30) தெலுங்கான மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டசபை தேர்தல் காலம் முடிவடையவுள்ள மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி இந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி நவம்பர் 30ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் களமிறங்கிய தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களிடம் வாக்குகளை சேகரித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று(நவம்பர்30) தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மொத்தம் 119 தொகுதிகள் இருக்கின்றது. இதில் 106 தொகுதிகளில் இன்று(நவம்பர்30) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் நக்சல் பாதிப்பு உள்ள மீதம் 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் தற்பொழுது முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களின் தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலில் பாரத் ராஷ்ட்ர சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இன்று(நவம்பர்30) நடைபெற்று வரும் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் மொத்தம் 2290 பேர் போட்டியிடுகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 3.26 கோடி பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக இருக்கும் நிலையில் இவர்களில் 5.33 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 35565 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.