திண்டுக்கல் அருகே உள்ள மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமியை தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே, டி.பண்ணைபட்டியில் உள்ள மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால், 48 நாட்கள் அம்மனுக்கு விரதம் இருந்து புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை அன்று நடக்கும் திருவிழாவில் தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா இந்த ஆண்டும் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருவிழாவில் கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், நீலமலைகோட்டை, புதுச்சத்திரம், இடையகோட்டை, ஒட்டன்சத்திரம், திருப்பூர், தாராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதில் அம்மனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்த 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த கோவில் முன் வரிசையாக அமர்ந்திருந்தனர். இதில் பெண்களும் பலர் இருந்தனர். அவர்களது தலையில் பூசாரிகள் தேங்காயை உடைத்து நேர்த்திக்கடனை முடித்து வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.