“ஸ்மார்ட்போன்” இல்லாததால் உயிரையே மாய்த்துக் கொண்ட பத்தாம் வகுப்பு மாணவன்!! உண்மை நிலவரம் என்ன?

Photo of author

By Parthipan K

தற்போது நிலவி வரும் பொதுமுடக்க நிலையில் அனைத்து மாணவர்களும் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்கள். மாணவர்களுக்கு ஆன்லைனில் சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது அந்தந்த கல்வி நிலையங்கள்.

 

இந்த ஆன்லைன் வகுப்பானது வசதி உள்ளவர்களுக்கும், வசதியே இல்லாத மாணவர்களுக்கும் பெரும் இடைவெளியை ஏற்படுத்துவதுடன், வசதியில்லாத மாணவர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.

 

ஆன்லைனில் படிப்பதற்கு திறன்பேசி (ஸ்மார்ட் போன்) அவசியமாக உள்ளதால் அதனை அந்தந்த மாணவர்களுக்கு உரிய வகையில் ஏற்பாடு செய்ய பெற்றோர்கள் கடமைப்பட்டுள்ளனர். ஆனால் வசதியே இல்லாத ஏழை குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு எப்படி கல்வி கிடைக்கும். ஆன்லைனில், அவர்கள் எப்படி உரிய வகையில் கல்வி கற்றுக் கொள்வார்கள் என்பது கேள்விக்குறிதான்.

 

இந்த நிலையில் ஆன்லைனில் படிப்பதற்கு திறன்பேசி இல்லாததால் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரையே மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பண்ருட்டி பகுதியை அடுத்த சிறுதொண்டமாதேவி எனும் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவரது மகன் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில்  பத்தாம் வகுப்பு சென்றுள்ளார். கொரோனா ஊரடங்கில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைனில் சிறப்பு வகுப்புகளை பள்ளிகள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.

இந்த நிலையில் விஜயகுமாரின் மகன் தான் படிப்பதற்கு ஸ்மார்ட் போன் வேண்டும் என அவரிடம் கேட்டுள்ளார். விஜயகுமாரின் குடும்பத்தில் வறுமை சூழல் நிலவியதாகவும், ஸ்மார்ட்போன் வாங்கித்தர பணம் இல்லாததால் அந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் கூறி அந்த மாணவரின் உடலை உடற்கூறாய்வு செய்து விஜயகுமார் இடம் ஒப்படைக்கப்பட்டது என அந்தப் பகுதி காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சோகம் அந்தப் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.