பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை: -பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பின் மூன்றாவது அலை பரவலின் காரணமாக, ஜனவரி மாதம் இறுதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் தொற்றின் பரவல் குறைந்து வந்ததன் காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நேற்று வெளியானது. இதில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் புதிதாக தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டு அதற்கு வரும் மே 21-ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேசிய கல்விக்கொள்கையின் முக்கிய அம்சமான தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு என்பதை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் தொழிற்கல்வி பாடத்துக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, மாநிலம் முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழிற்கல்வி பாடத்தை பயின்று வரும் நிலையில், அவர்களின் திறனை மேம்படுத்தவே பொதுத்தேர்வு அட்டவணையில் தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், பத்தாம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரை அவர்களுக்கு 500 மதிப்பெண்களுக்கே தேர்வு நடத்தப்படுகிறது என்றும், தொழிற்கல்வி பாடத்தில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று அவசியமில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.