ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் படம் படுதோல்வி: ரூ.700 கோடி நஷ்டம் என தகவல்
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஒருவர் நடித்த திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியான நிலையில் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் தயாரிப்பாளருக்கு சுமார் ரூ.700 கோடி நஷ்டம் என தகவல் வெளியாகியுள்ளது
ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன படங்களில் ஒன்று டெர்மினேட்டர் சீரியஸ் படங்கள். இந்த படத்திற்கு என உலகம் முழுவதும் ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. ஏற்கனவே டெர்மினேட்டர் திரைப்படத்தின் ஐந்து பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் ஆறாவது பாகம் டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’என்ற பெயரில் கடந்த வாரம் வெளியானது

அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் ஆக்சன் நடிப்பு, ஜேம்ஸ் கேமரூனின் கதை, டெட்பூல் இயக்குநர் டிம் மில்லரின் இயக்கம் என்று ஹாலிவுட்டின் ஜாம்பவான்கள் இணைந்த இந்த படம் வெளியான முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. தொய்வான திரைக்கதை, வலுவில்லாத காட்சியமைப்புகள் என உலகம் முழுவதும் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றதால் இந்த திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
இந்தப் படத்தின் மொத்த தயாரிப்பு செலவு சுமார் 185 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். மேலும் இந்த படத்தின் விளம்பர செலவு மட்டும் 100 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. ஆனால் படத்துக்குக் கிடைத்துள்ள எதிர்மறை விமர்சனங்களால் இந்தப் படத்தைத் தயாரித்த பாரமவுண்ட், ஸ்கைடான்ஸ், டிஸ்னி ஆகிய நிறுவனங்களுக்கு சுமார் 100 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.700 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை உலக அளவில் இந்த படம் 180 முதல் 200 மில்லியன் டாலர்களே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.