சாலை மற்றும் தெருக்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலையில் ஹெல்மெட் மாட்டியபடி ஒருவர் வண்டியை ஓட்ட பின்னால் அமர்ந்திருக்கும் நபர் நகைகளை பறித்து செல்கிறார்கள். தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இது நடந்தாலும் தலைநகர் சென்னையில்தான் இந்த குற்றச்சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது.
சென்னையில் இன்று காலை ஒரே நேரத்தில் திருவான்மியூர், பெசண்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருக்கிறது. 15 சவரனுக்கு மேல் நகைகளை பெண்கள் பறிகொடுத்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசி இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. இந்நிலையில்தான் தலைநகரில் இன்று காலை 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருக்கிறது என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.

எனவே, செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துவங்கியது. அதில் 2 பேர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் விமானம் வழியாக அவர்கள் தப்பி செல்ல முயன்றதும் போலீசாருக்கு தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் விமான நிலையம் சென்று விமானத்தை நிறுத்தி அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
அதிகாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டிகளை குறி வைத்து தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதோடு, அவர்களின் கும்பலை சேர்ந்த மற்றவர்கள் சென்னையில் எங்கெல்லாம் பதுங்கி இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கும் பணியிலும் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.