திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா! பக்தி பரவசத்துடன் முருகனை தரிசனம் செய்யும் பக்தர்கள்!
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் இன்று(ஜனவரி25) தைபூச திருவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஆண்டு தோறும் தை மாதம் தைப்பூசம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த வருடம் ஜனவரி 25ம் தேதி அதாவது இன்று தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் தமிழ் கடவுள் முருகனுக்கு நேற்று(ஜனவரி24) சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
முருகப் பெருமான் வேல் வாங்கிய நாளை தைப்பூசமாக கொண்டாடி வருகின்றோம். தைப்பூச தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள கடற்கரையில் லட்சக் கணக்கான மக்கள் குவிந்தனர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக முருகன் கோயில்களுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். திருச்செந்தூரை போலவே பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், பழனி, திருத்தணி, சுவாமி மலை ஆகிய முக்கிய முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகின்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு இன்று(ஜனவரி25) தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் தைப்பூச தினத்தன்று அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.