உலக மக்களால் தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமானின் 3வது படை வீடாக பழனி முருகன் கோவில் இருக்கிறது, இங்கே வருடம் தோறும் தைப்பூச திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம் இந்த வருடத்திற்கான தைப்பூச திருவிழா பழனி முருகன் கோவிலில் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து குவியத் தொடங்கினார்கள், அலகு குத்தியும், காவடி எடுத்தும், முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் ,நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்துகொள்வதற்கு தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இந்த சூழ்நிலையில், தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்றையதினம் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாத காரணத்தால், கோவில் உள் பிரகாரத்தில் வலம் வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த தேரோட்டம் பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை முட்ட 4 ரத வீதிகளில் நடைபெறும் இருந்தாலும் இந்த வருடம் நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக, முதன் முறையாக பக்தர்கள் யாரும் இல்லாமல் கோவில் உள் பிரகாரத்தில் சிறிய தேரில் சாமி எழுந்தருளி வலம் வந்திருக்கிறார்.
கோவிலில் தரிசன தடை உத்தரவு ஒருபுறம் இருந்தாலும், தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்க நேற்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை யாகவும், காவடி எடுத்தும், பழனி முருகன் கோவிலுக்கு வந்திருக்கிறார்கள்.
மலை கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி இல்லாத காரணத்தால், அவர்கள் பழனி கிரிவல வீதிகளில் உலா வந்தார்கள். அதோடு பாத விநாயகர் கோவில் முன்பு நேர்த்திக்கடன் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதேபோல அதிகாலை சமயத்தில் கிரிவலம் வந்த பக்தர்கள் சூரியனையும் வழிபட்டிருக்கிறார்கள்.
தரிசனம் நேற்றுடன் முடிவடைந்ததன் காரணமாக, இன்றைய தினம் சாமி தரிசனம் செய்வதற்காக பழனியில் இருக்கின்ற தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் ஏராளமான பக்தர்கள் தங்கி இருக்கிறார்கள்.