உதகையில் நடைபெற்று வந்த 18-வது ரோஜா கண்காட்சி நிறைவடைந்தது. 3 நாட்கள் நடைபெற்ற கண்காட்சியை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த நிலையில் ரோஜா அலங்காரங்கள் 2 நாட்களுக்கு காட்சிக்கு வைக்கபட்டிருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவிப்பு.
கோடை சீசனை முன்னீட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க கோடை விழா நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்ச்சியான 18-வது ரோஜா கண்காட்சி உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன், கதர் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
ரோஜா கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க 30 அடி உயரம், 12 அடி அகலத்தில் 35 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு ஈபிள் டவர், 15,000 ரோஜா மலர்களை கொண்டு செல்பி பாயிண்ட், 8000 ரோஜா மலர்களால் தாய் மற்றும் குட்டி யானை போன்ற பிரம்மாண்ட உருவங்கள் வடிவமைக்கபட்டு காட்சிக்கு வைக்கபட்டன.
சிறுவர்களை கவரும் விதமாக 3000 ரோஜாக்களால் கிரிக்கெட் பேட்டும், 1200 ரோஜாக்களால் ஆன கிரிக்கெட் பந்தும், 2000 ரோஜாக்களால் ஹாக்கி மட்டையும், 1200 ரோஜா மலர்களால் இறகு பந்து மட்டையும் வடிவமைக்கபட்டு காட்சிபடுத்தபட்டது.
6000 ரோஜாக்களை கொண்டு இறகு பந்தும், கால்பந்து மற்றும் காலனி ஆகியவைகள் 3400 ரோஜா மலர்களை கொண்டு உருவாக்கபட்டது. மேலும் ஊட்டி 200 வடிவம் 4000 ரோஜாக்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கபட்டது.
3 நாட்கள் நடைபெற்ற கண்காட்சியை சுமார் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த நிலையில் இன்று மாலையுடன் (15-05-23) நிறைவடைந்தது. ஆனாலும் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணமாக இருப்பதால் அதிக ஆர்வம் காட்டுவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனையடுத்து மேலும் 2 நாட்களுக்கு ரோஜா அலங்காரங்கள் அப்படியே வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனிடையே ரோஜா கண்காட்சியை முன்னிட்டு வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சிறந்த ரோஜா தோட்டம் அமைத்தவர்களுக்கு பரிசு கோப்பைகளை மாவட்ட ஆட்சிதலைவர் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.