திடீரென பாய்ந்து தாக்கிய விலங்கு! வீட்டின் அருகில் இயற்கை கடன் கழிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!
தனது வீட்டின் அருகில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற தொழிலாளி மீது திடீரென சிறுத்தை பாய்ந்து தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
கோத்தகிரி மாவட்டம் மேல் பரவக்காடு டேன்டீ( தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம்) நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் பன்னீர்செல்வம் வயது 51, இவர் அங்குள்ள டேன்டீ குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் நேற்று இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்தப் பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் பன்னீர்செல்வத்தின் மீது பாய்ந்து அவரை கடுமையாக தாக்கியது.
இதனால் அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் ஓடி வரவே சிறுத்தை அங்கிருந்து தப்பித்து ஓடி மறைந்தது. மக்கள் படுகாயம் அடைந்த பன்னீர்செல்வத்தை மீட்டு குயின் சோலை டான்டீ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த கோத்தகிரி வனசரகர் ராம் பிரகாஷ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சிறுத்தை தாக்குதலால் படுகாயம் அடைந்த பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் வனவிலங்கு தாக்கினால் அரசு வழங்கும் உதவித்தொகையை பெற்று தருவதாக கூறியுள்ளனர்.
சம்பவம் பற்றி பொதுமக்கள் கூறுகையில் டேன்டி குடியிருப்பு பகுதியில் கழிப்பிட வசதிகள் இல்லை. மேலும் இயற்கை உபாதைக்காக ஒதுங்கும் இடத்தில் வனப்பகுதி அருகில் உள்ளது. இதனால் சிறுத்தை, காட்டெருமை, கரடி ,போன்ற விலங்குகள் மனிதர்களை தாக்கும் அபாயங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே இங்கு முறையான கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தித் தருவதுடன் பன்னீர்செல்வத்தை தாக்கிய சிறுத்தையை கூண்டில் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கையை விடுத்தனர்.