அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில், நாளை இறுதி விசாரணைக்கு வருகின்றன.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி, வழக்குகளின் இறுதி விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்திருந்தனர். இடைப்பட்ட காலத்தில் கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள், இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி மேல் முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் நாளை பிற்பகல் 2:15 மணிக்கு இறுதி விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளன. நாளையும், நாளை மறுநாளும் இறுதி விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.