சமனில் முடிந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடர்… கோப்பையை தக்க வைத்த ஆஸ்திரேலிய அணி…
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடர் சமனில் முடிந்த நிலையில் ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா அணி தக்க வைத்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதலாவது மற்றும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி ஆதிக்கத்துடன் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. நான்காவது போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜூலை 27ம் தேதி தொடங்கிய ஐந்தாவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பத்து விக்கெட்டுகளை இழந்து 283 ரன்கள் குவித்தது.
இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 395 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 384 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
384 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 5ம் நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 334 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2 போட்டிகளிலும் இங்கிலாந்து 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் 2023ம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடர் சமனில் முடிந்தது. ஆஷஸ் தொடர் சமனில் முடிந்தாலும் ஆஷஸ் கோப்பை இரண்டு அணிகளாலும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. இதற்கு முந்தைய ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இருந்ததால் 2023ம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரின் கோப்பையையும் ஆஸ்திரேலியா அணி தக்க வைத்துள்ளது.