ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்திலும் சட்டசபை கூடும்போது ஆளுநர் வந்து உரையாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த விதத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்க இருக்கிறது.
நோய் தொற்று அச்சுறுத்தல் இருந்து வருகின்ற சூழ்நிலையில், சென்ற சில வருடங்களாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. நோய்த்தொற்று பரவாமல் குறைந்து வந்த சூழ்நிலையில், மறுபடியும் சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற சட்டசபை கூட்ட அரங்கத்தில் இந்த கூட்டத்தை நடத்த ஏற்பாடு மும்முரமாக நடந்து வந்தது.
ஆனாலும் தமிழகத்தில் மறுபடியும் நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக, சட்டசபை கூட்டத்தை கலைவாணர் அரங்கத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் மிக விரைவாக முன்னெடுக்கப்பட்டன, சபாநாயகர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். இந்த சூழ்நிலையில்தான் கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணி அளவில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது இந்த வருடத்தின் முதல் கூட்டம் என்ற காரணத்தால், ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றுகிறார் என்று சொல்லப்படுகிறது.
இதற்காக இன்று காலை 9 .55 மணிக்கு கலைவாணர் அரங்கத்திற்கு வரும் ஆளுநர் அவர்களை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன், உள்ளிட்டோர் வரவேற்று அரங்கத்திற்கு அழைத்து வருவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்வார், அவருக்கு வலது புறம் இருக்கின்ற இருக்கையில் சபாநாயகர் அமர்வார் இடதுபுறம் இருக்கின்ற இருக்கையில் கவர்னரின் செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டிலும், அமர்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
சரியாக காலை 10 மணியளவில் சட்டசபை கூட்டம் ஆரம்பமாகும். முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாட படும் அந்த சமயத்தில் அவையில் இருக்கின்ற எல்லோரும் எழுந்து நிற்பார்கள். அதன் பிறகு ஆளுநர் ரவி தன்னுடைய உரையை ஆங்கிலத்தில் தொடர்வார் இந்த உரை சுமார் ஒன்றரை மணி நேரம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அவருடைய உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார் என்று சொல்லப்படுகிறது.
அத்துடன் இன்றைய கூட்டம் நிறைவடையும். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவருடைய அறையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவு செய்யப்பட இருக்கிறது.
இதற்கிடையில் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்ற சட்டசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நோய்த்தொற்று பரிசோதனை செய்து கொண்டார்கள். இந்த சூழ்நிலையில், பெரம்பலூர் திமுக சட்டசபை உறுப்பினர் பிரபாகரன் நோய்தொற்று பரிசோதனையை செய்து கொண்டார். இதில் அவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றுமுன்தினம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அத்துடன் அவருடைய கார் ஓட்டுனர் மற்றும் உதவியாளர்கள் மணிகண்டன், இளையராஜா, சிவசங்கர், உட்பட 4 பேருக்கு நோய்த்தொற்று பரவல் கண்டறியப்பட்டதையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சட்டசபை உறுப்பினரின் குடும்பத்தினர் உட்பட ஒரு சிலருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
அதேபோல திருச்சி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசின் மகனும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி சட்ட சபை உறுப்பினருமான எஸ்டி ராமச்சந்திரனுக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை சார்ந்த இவர் சட்டசபை கூட்டத்தை முன்னிட்டு நோய்த்தொற்று பரிசோதனை செய்து கொண்டார்.
அப்போது அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனைத்தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் அவர் சென்னையில் இருக்கின்ற வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு முன்பாகவே தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆகவே இந்த சட்டசபை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது. அலுவல் ஆய்வு குழு கூட்டத்திலும் இது தொடர்பாக விவாதிக்கபடலாம் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை இன்று மதியம் மறுபடியும் சட்டசபையை கூட்டி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை நடத்தி ஒரே நாளில் முடித்து விடவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
பத்திரிகையாளர்கள், சட்டசபை ஊழியர்கள், என்று 12 நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரே நாளில் சட்டசபை கூட்டம் நிறைவுபெறலாம் என்றும், அதற்கான அறிவிப்பு அலுவல் ஆய்வுக் கூட்டம் முடிவடைந்த பிறகு வெளியாகலாம் என்றும், சொல்லப்படுகிறது.