தறிகெட்டு ஓடிய பஸ் .. ஒருவர் பலி!! டிரைவருக்கு வலிப்பு வந்ததால் நேர்ந்த சோகம் !!
ஓடிக்கொண்டு இருந்த பஸ்ஸில் டிரைவருக்கு வலிப்பு வந்ததால் ஒருவர் மீது பஸ் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் இருந்து 30 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டு இருந்தது. பஸ்ஸினை பழனி என்ற ஓட்டுனர் ஓட்டி வந்துள்ளார்.
அந்த பஸ் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே வந்த நிலையில் திடிரென பஸ் டிரைவர் பழனிக்கு வலிப்பு ஏற்ப்பட்டுள்ளது. அதில் அவரின் கட்டுப்பாட்டினை இழந்த பஸ் தறிகெட்டு தாறுமாறாக ஓடியது.இதில் சாலையோரம் நின்ற ஐந்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளின் மீது அடுத்தடுத்து பஸ் மோதியது.
இதில் இருசக்கர வாகனங்கள் அப்பளம் போல் நொறுங்கின.இந்த விபத்தில் சாலையில் இருந்த முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். காலை நேரம் என்பதால் கூட்ட
நெரிசல் குறைவாக இருந்த காரணத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பதும்
குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வலிப்பு வந்ததால் மயங்கி கிடந்த
டிரைவர் பழனி மற்றும் பஸ்ஸில் மோதியதில் படுகாயம் அடைந்த முதியவர் ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.டிரைவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது பணியில் இருக்கும் டிரைவர்களுக்கு வலிப்பு, மாரடைப்பு ஏற்படுதல் போன்றவை அதிகரித்து வருகின்றது.இதனால் அவர்களுக்கு மட்டுமின்றி பயணிகளுக்கும் விபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இதற்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் ஓட்டுனர்களுக்கு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றது.மேலும் இந்த விபத்து பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.