உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டும் மத்திய அரசு! இது தேர்தல் ராஜதந்திர நடவடிக்கையா? எதிர்கட்சிகள் கேள்வி!

Photo of author

By Sakthi

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து தீவிர போர் நடைபெற்று வருகிறது.இதன்காரணமாக, உக்ரைன் பலத்த சேதத்தை சந்தித்திருக்கிறது.

மேலும் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருக்கின்றன. அதோடு உக்ரைன் தலைநகரில் இருக்கின்ற ஒரு நீர் மின் நிலையத்தையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியிருக்கின்றன அதோடு கார்கிவ் உள்ளிட்ட மிக முக்கிய பெரிய நகரங்களையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியிருக்கின்றன.

இந்த நிலையில், உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு வருகிறது. உக்ரைனில் மிகவும் தீவிரமாக போர் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் உக்ரைனின் அண்டை நாடுகள் உதவியுடன் மத்திய அரசு இதனை மிகவும் திறம்பட கையாண்டு வருகிறது.

அதாவது உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, உள்ளிட்ட நாடுகளின் எல்லைக்கு உக்ரைனிலிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு அங்கிருந்து இந்திய விமானங்கள் மூலமாக இந்திய மக்கள் தாய் நாட்டிற்கு திரும்பி வருகிறார்கள்.

அமெரிக்கா போன்ற உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளே உக்ரைனில் போர் நடைபெறுவதை தொடர்ந்து அங்கிருந்து தன் மக்களை மீட்டு வருவதில் சுணக்கம் காட்டி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா, பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகள் உக்ரைனிலிருக்கும் தங்களுடைய நாட்டு மக்களைக் கைவிட்டு விட்டதாகவே பார்க்கப்படுகிறது.

ஆனாலும் இந்திய அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு வருகிறது.
மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மிகவும் பாதுகாப்பாக வைத்து வந்தாலும்கூட அதிலும் மத்திய அரசு அரசியல் லாபம் பார்க்கிறது என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

அதாவது, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது உத்தரப்பிரதேசத்தில் மட்டுமல்லாமல் மேலும் 4 மாநிலங்களில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது.இந்த தேர்தல்களை மனதில் வைத்துத்தான் மத்திய அரசு இதில் தீவிரம் காட்டி வருகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.

மத்திய அரசு நினைத்திருந்தால் போர் தீவிரம் அடைவதற்கு முன்னதாகவே இந்தியர்களை பத்திரமாக மீட்டு வந்திருக்கலாம் அதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருந்தது. ஆனாலும் மத்திய அரசு அப்போது இதில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை.ஆனால் தற்சமயம் போர் உக்கிரமான நிலையை அடைந்து வருகின்ற சூழ்நிலையில், இந்திய மக்களை மத்திய அரசு மிகவும் சாதுரியமாக மீட்டு வருகிறது.

இந்திய மக்களை எந்த விதமான சேதமுமின்றி பத்திரமாக மத்திய அரசு மீட்டு வருவது நல்ல விஷயம்தான் என்றாலும் கூட இந்த மீட்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு அரசியல் செய்கிறது என்று சொல்லப்படுகிறது.

அதாவது இந்த உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் மத்திய அரசின் இந்த மீட்பு பணிகள் உள்ளிட்டவற்றை பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அவ்வாறு பிரச்சாரங்களின் போது இந்த மீட்பு பணிகளில் நடவடிக்கைகள் தொடர்பாக பேசுவதன் மூலமாக மக்களின் மனதில் இடம் பிடித்து விடலாம். அதன் மூலமாக மக்களின் வாக்கை கவரலாம் என்பதே அவரின் எண்ணமாக இருக்கிறது என்றும் பலர் தெரிவித்து வருகிறார்கள்.

அதோடு சொல்லி வைத்தார் போல கடந்த 2019 ஆம் வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடை பெறும் தருவாயில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஒன்று நம்முடைய இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது இதில் 40க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் நாட்டிலிருக்கின்ற பாலாகோட் தீவிரவாத முகாமில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாமை முற்றிலுமாக அழித்தொழித்தது.

அந்த சமயத்தில் நாடாளுமன்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் உட்பட பல்வேறு மத்திய அமைச்சர்கள் இந்த தாக்குதல் தொடர்பாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள். இதற்க்கு எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கடும் கண்டனங்களை பதிவு செய்தது.அதாவது காங்கிரஸ் தரப்பில் நாட்டின் பாதுகாப்பில் கூட மத்திய அரசு அரசியல் செய்கிறது என்று பலரும் தெரிவித்து வந்தார்கள்.

அதேபோலவே தற்போது இந்த 4 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற சூழ்நிலையில் இந்த மீட்பு நடவடிக்கையில் மத்திய அரசு அரசியல் செய்து வருகிறது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

என்னதான் இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருவது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும் அது இந்தியர்களின் நன்மைக்குத்தான் என்றாலும் கூட மத்திய அரசு நினைத்திருந்தால் போர் தீவிரம் அடைவதற்கு முன்னதாகவே இதனை செய்திருக்கலாம் ஆனால் அப்போது மத்திய அரசு இது தொடர்பாக பெரிதாக கண்டு கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.

ரஷ்யா, உக்ரைன், மீது போர் தொடுத்திருந்தாலும் ரஷ்யாவை பொருத்தவரையில் இந்தியா மிகச் சிறந்த நட்பு நாடாகவே விளங்குகிறது . போர் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இந்திய மக்களை ரஷ்யப் படைகள் எதுவும் செய்து விடாது என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றாக தெரியும்.

ஆகவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ரஷ்ய அதிபர் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் நிச்சயமாக இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று வாக்களித்தார்.

பரஸ்பரம் 2நாடுகளும் மிகப்பெரிய கூட்டாளியாக இருப்பதால் இதை வைத்து இந்த தேர்தலில் மத்திய அரசு அரசியல் செய்து வருகிறது. இதுதான் மோடியின் ராஜதந்திர நடவடிக்கை என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனாலும் இதனை பலர் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை காரணம் நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலை அவ்வாறு இருக்கிறது. நாட்டு மக்கள் ஆபத்திலிருக்கிறார்கள் இதில் யாரும் அரசியல் செய்ய மாட்டார்கள் என்பதே பலரின் எண்ணமாக இருந்து வருகிறது.

ஆனாலும்கூட நாட்டு மக்கள் ஆபத்தில் இருந்தாலும் அவர்களை பத்திரமாக மீட்டு வந்து உலக நாடுகளிடையே தன்னுடைய வலிமையை வெளிப்படுத்தியிருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி அதேசமயம் இதை வைத்து அரசியலும் செய்திருக்கிறார் என்கிறார்கள். அதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திர நடவடிக்கை என்றும் கருதப்படுகிறது.