ஆபரேஷன் கங்கா! இந்திய விமானப் படையின் முதல் விமானம் 200 இந்தியர்களுடன் டெல்லி வந்து சேர்ந்தது!

0
56

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எதுவும் எட்டப்படாத சூழ்நிலையில், போர் தீவிரமடைந்து வருகிறது.

இதற்கிடையில் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியிருக்கிறது ரஷ்யா. அதோடு பல முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல் தொடுத்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை மேற்கு மிதமாக ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலமாக உக்ரைனில் சிக்கி இருக்கின்ற மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரையும் தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த பணியில் இந்திய விமானப் படை விமானங்களும் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ருமேனியா தலைநகர் புகாரெஸ்டிலிருந்து இந்திய மாணவர்கள் உட்பட 200 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான முதல் விமானம் டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் நேற்றிரவு தரையிறங்கியது.

இதற்கு முன்னதாக ருமேனியாவில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய விமானப்படை விமானத்திற்குள் அமர வைக்கப்பட்டிருந்த மாணவர்களை விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் சந்தித்துப் பேசினார். எங்கள் இந்திய மாணவர்கள் தாய் நாட்டில் பத்திரமாக தரையிறங்க இருப்பது நல்ல விஷயம் என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.

அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த இந்தியர் ஒருவர் தமது வளர்ப்பு நாயை அழைத்து வந்தார் அதற்கும் விமானப்படை விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கு நடுவே விமானப்படைக்குச் சொந்தமான மேலும் 3 விமானங்கள் இந்திய மாணவர்களுடன் இன்று அதிகாலையில் தலைநகர் டெல்லியில் தரை இறங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.