நடப்பு சாம்பியனுக்கு எதிராக களம் இறங்கும் முன்னால் சாம்பியன்!! பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டி!
கத்தார் நாட்டின் தோஹாவில் 22-வது உலக கால்பந்தாட்டபோட்டி திருவிழா நடைபெற்று வருகின்றன. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று,காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் உள்ளன.காலிறுதி போட்டியின் முடிவில் அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், மொராக்கோ,குரோசியா,ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.
போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் முதலாவது அரையிறுதிப்போட்டி முன்னால் சாம்பியனான அர்ஜென்டினாவுக்கும், குரோசியாவிற்க்கும் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா குரோசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதிப்பெற்றது.
இரண்டாவது அரையிறுதி போட்டி நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மொராக்கோ அணியை நேற்று நள்ளிரவு அல்பேத் ஸ்டேடியத்தில் சந்தித்தது. இந்த உலக கோப்பையில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அரையிறுதி வரை நுழைந்த ஆப்பிரிக்க அணி என்ற பெருமையுடைய மொராக்கோ உடன் சாம்பியன் அணியான பிரான்ஸ் மோதியது.
விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி வீரர் தியோ ஹெர்ணன்டஸ், ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் கோல் அடித்து ரசிகர்களை உற்சாகமடைய செய்தார். அடுத்து மொராக்கோ அணியினர் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவும் பிரான்ஸ் அணியிடம் எடுபடவில்லை.இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.
பின்னர் பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது பாதியில் 79-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ராண்டல் கோலோ தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதனால் அணிக்கான வெற்றிவாய்ப்பு உறுதியானது.அனல் பறந்த ஆட்டத்தில் மொராக்கோ வீரர்கள் அடுத்து கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாயின. கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் அந்த அணியால் ஒரு கோலினை கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் மொராக்கோவை வீழ்த்தியது.இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது அணியாக தகுதிப்பெற்றது.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இரு அணிகளுக்கும் வருகின்ற டிசம்பர்-18 ந் தேதி மகுடத்திற்க்கான கடைசி வாய்ப்பு நடைபெற இருக்கிறது.
தர வரிசையில் 4-வது இடம் வகிக்கும் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் லீக் சுற்றில் 2-வெற்றி மற்றும் ஒரு தோல்வி பெற்று முதலிடம் பிடித்த கையோடு இரண்டாவது சுற்றில் போலந்தை வீழ்த்தி, காலிறுதியில் இங்கிலாந்தை 2-1 கோல் கணக்கில் வெற்றிப்பெற்று இறுதியாக 2-0 என்ற அளவில் மொராக்கோவை வெளியே அனுப்பி இறுதிப் போட்டிக்குள் அடி எடுத்து வைத்துள்ளது.
இறுதிப் போட்டியில் வெற்றி மகுடம் யாருக்கு?? பிரான்சை வெல்லுமா அர்ஜென்டினா??என்பது ஞாயிற்றுக்கிழமை தெரிந்துவிடும்.