மதங்களுக்கு நான் எதிரி இல்லை எனக் கூறும் முதல்வர்! இந்துக்களுக்கு பண்டிகை வாழ்த்து சொல்லுவாரா? பாஜக மகளிரணி தலைவி கேள்வி
முதல்வர் நான் மதங்களுக்கு எதிரி இல்லை எனக் கூறியுள்ளார். எனவே இனிமேல் இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவாரா? என வானதி சீனிவாசன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 5ஆம் தேதி இந்து சமய அறநிலை துறை சார்பில் 2500 கோயில்களுக்கு 50 கோடி நிதி வழங்கும் விழாவில் பேசினார்.
அப்போது அவர் திராவிடம் என்ற சொல்லை பிடிக்காதவர்கள் எங்களை மதத்திற்கு எதிராக சித்தரித்துள்ளனர். நாங்கள் மதவாதத்திற்கு தான் எதிரிகளே தவிர மதத்திற்கு அல்ல. மதம் ஜாதி வேற்றுமை மட்டுமல்ல கோவில் சாமி வேற்றுமையும் திராவிட அரசுக்கு கிடையாது என்று பேசி உள்ளார்.
மேலும் அவர் திராவிடம் என்பது இனம் அல்ல. அது இந்தியாவின் தெற்கு பகுதி நிலங்களில்வாழும் மக்களை குறிப்பது. அதனால் திராவிடம் என்ற சொல் யாருக்கும் பிடிக்காமல் போகாது. தென் மாநிலங்களில் வசிப்பவர்கள் அனைவரும் திராவிடர்கள் தான். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் தான் திராவிடம் என்பது இனமாக திட்டமிட்டு காட்டப்பட்டது. இவ்வாறு முதல்வர் அந்த உரையில் பேசினார்.
இதனை முன்னெடுத்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் நான் மதவாதத்திற்கு தான் எதிரி! மதத்திற்கு அல்ல எனக் கூறியிருக்கும் முதல்வர் ஏன் இந்துமத பண்டிகைகளுக்கு இந்துக்களுக்கு வாழ்த்து சொல்வதில்லை என விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது மட்டுமில்லாமல் அவர்களின் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் திமுகவினர் கலந்து கொள்கின்றனர். கடந்த மாதம் கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் நான் கிறிஸ்தவர் தான். என் மனைவியும் கிறிஸ்தவர் தான் என உண்மையைக் கூறி இருக்கிறார். அதேபோல் திமுகவில் உள்ள மற்றவர்கள் நாங்கள் இந்துக்கள் தான் எனக் கூற முன் வருவார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறது. குறைந்தபட்சம் ஒரு இந்து பண்டிகைகளுக்கு கூட வாழ்த்து சொல்ல மனம் இல்லாத முதல்வர் நாங்கள் மதங்களுக்கு எதிரானவர் அல்ல எனக் கூறுவது வழக்கம் போல் இந்து மக்களை ஏமாற்றும் தந்திரம் தான். இனியும் இது போன்ற வார்த்தைகளால் மக்களை ஏமாற்ற முடியாது.
மதங்களுக்கு எதிரி இல்லை என முதல்வரின் உள்ளத்திலிருந்து இந்த வார்த்தைகள் வந்திருந்தால் கண்டிப்பாக இந்து மத பண்டிகைகளுக்கு மக்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். மற்ற மதங்களின் கோயில்கள் மதங்களில் தலையிடாத அரசு, இந்து மத கோயில்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும். அதுவே உண்மையான மதசார்பின்மை மற்றும் மதங்களை மதிப்பது ஆகும் என்று வானதி சீனிவாசன் அவர்கள் கூறிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.