முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு!

Photo of author

By Sakthi

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட ஆட்சியாளர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் பங்குபெறும் 3 நாட்கள் மாநாடு இன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் ஆரம்பமாகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் அங்கு ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரிகிறது.

தமிழக அரசு கடந்த 10 மாதங்களில் புதிய அறிவிப்புகளையும் திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. ஆளுநர் உரை முதல்-அமைச்சரின் செய்தி வெளியீடுகள் சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கை, வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கின்ற அறிவிப்புகள் என்று ஒட்டுமொத்தமாக 1704 அறிவிப்புகள் இதுவரையில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

அவற்றில் 80 சதவீதத்திற்கும் மேலான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

மீதமிருக்கின்ற அறிவிப்புகளில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டவிருக்கின்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியாளர்கள் மூலமாக அறிந்து கொள்வதற்காகவும், அவற்றை மேலும் சிறப்பாகவும், விரைவாகவும், செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து போதுமான அறிவுரைகளை வழங்குவதற்கும் இந்த மாநாடு நடைபெறவிருப்பதாக சொல்லப்படுகிறது.

3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மாவட்ட நிர்வாகம் சட்டம் ஒழுங்கு மாவட்ட வளர்ச்சிப்பணிகள் தொடர்பான விரிவான ஆய்வை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொள்வார் என்று தெரிகிறது. வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10வது மாடியில் இந்த மாநாடு இன்று காலை 10 மணி அளவில் ஆரம்பமாகிறது. 10 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரையில் மாவட்ட ஆட்சியாளர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்து பங்குபெறும் கூட்டம் நடைபெறும் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டமும், விருது வழங்கும் நிகழ்ச்சியும், நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமையான நாளைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6 .30 மணி வரையிலும் மாவட்ட ஆட்சியாளர்கள் மட்டும் பங்கு பெறும் மாநாடு நடைபெறுகிறது.

நாளை மறுநாள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் மாவட்ட ஆட்சியாளர்கள் மட்டும் பங்குபெறும் கூட்டமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையில் மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்து பங்குபெறும் கூட்டமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு மேல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும் என்று சொல்லப்படுகிறது.