அதிமுகவின் திருத்தப்பட்ட கட்சி விதிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்!!

Photo of author

By Savitha

அதிமுகவின் திருத்தப்பட்ட கட்சி விதிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்.

கடந்த ஆண்டு ஜூலை11 ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கிவிட்டு மீண்டும் பொதுச் செயலாளர் பதவியை கொண்டு வரவும் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக நியமித்தும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

திருத்தப்பட்ட அதிமுகவின் கட்சி விதிகளுக்கு அங்கீகாரம் வழங்க கோரியும் இவற்றை தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் இவற்றின் மீது 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்றைக்கு பரிசீலித்த தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட அதிமுகவின் கட்சி விதிகளுக்கு அங்கீகாரம் வழங்கி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் திருத்தப்பட்ட கட்சியின் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் நிர்வாகிகள் நியமனத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இவை நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புக்கு உட்பட்டது என தெரிவித்துள்ளது.

அதிமுகவின் திருத்தப்பட்ட கட்சி விதிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட மூலம் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மேலும் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பில் ஒதுக்கப்படும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்ன ஒதுக்கப்பட வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையை ஏற்று கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளருக்கும் இரட்டை இலை சின்னம் வழங்குமாறு கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.