புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் திருவிழா! போக்குவரத்தில் செய்யப்பட்ட மாற்றம்! 

Photo of author

By Amutha

புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் திருவிழா! போக்குவரத்தில் செய்யப்பட்ட மாற்றம்! 

கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கோனியம்மன் திருவிழா காரணமாக இன்று புதன்கிழமை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படுவது கோனியம்மன். இந்த கோவிலின் தேர் திருவிழா இன்று நடைபெற இருக்கிறது. இதனால் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உக்கடம், பேரூர், ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை, தெலுங்கு வீதி, செட்டி வீதி, சலிவன் வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1. பேரூரில் இருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி அசோக் நகர் ரவுண்டான வழியாக பேரூர் பைபாஸ் ரோடு வழியாக செல்லலாம். 

2. வைசியாள் வீதி, செட்டிவீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு வழியாக சென்று பேரூர் சாலையை அடையலாம். 

3. மருதமலை சாலை, தடாகம் சாலையில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் உள்ளே வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மருத மலை தடாகம் சாலையில் இருந்து காந்திபார்க், பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக வாகனங்கள் செல்ல வேண்டும். 

4. உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக, தடாகம் ரோடு, மருதமலை, மேட்டுப்பாளையம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு அசோக் நகர் ரவுண்டானா வழியாக காந்திபார்க் சென்று செல்ல வேண்டும்.

மேலும் கனரக வாகனங்கள் நகருக்குள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வருவதற்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தேர் திருவிழா நடைபெறும் வீதிகளான ராஜவீதி, ஒப்பணகார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி. வீதி ஆகிய சாலைகளில் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை.

இருசக்கர வாகனங்களை ராஜவீதி மாநகராட்சி வாகன நிறுத்தும் இடத்திலும், 4 சக்கர வாகனங்களை உக்கடம் போலீஸ் நிலையத்திற்கு எதிரே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்கு கீழே உள்ள காலியிடத்தில் நிறுத்த பயன்படுத்தி கொள்ளலாம் என்று மாநகர போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கோவில் திருவிழாவை முன்னிட்டு 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.