மத்திய அரசு அப்படி எதுவும் செய்யவில்லை! தொழில்நுட்ப மந்திரி அளித்த விளக்கம்!

Photo of author

By Hasini

மத்திய அரசு அப்படி எதுவும் செய்யவில்லை! தொழில்நுட்ப மந்திரி அளித்த விளக்கம்!

கடந்த 2019 ம் ஆண்டு, இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தில் சாப்ட்வேர் மூலம் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பார்பிட்டன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து தி வயர், வாஷிங்டன் போஸ், கார்டியன் உள்ளிட்ட பல்வேறு ஊடக நிறுவனங்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்பதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, மெக்சிகோ ஹங்கேரி, பக்ரைன் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரின்  செல்போன்களுக்கான எண்களும் பட்டியலில் உள்ளன.

இதில் இரண்டு அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள் 40க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள், மற்றும் ஒரு நீதிபதி ஆகியோரின் எண்களும் அடக்கம். சமூக ஆர்வலர்களின் எண்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த விசாரணை அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய அரசு முழுமையாக நிராகரித்து உள்ளது.

மேலும் இந்தியா ஒரு உறுதியான ஜனநாயக நாடு என்றும், அதன் அனைத்து குடிமக்களின் தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வந்தது. இதே போன்று பெகாசஸ் செயலியை இந்தியாவுக்கு விற்பனை செய்த நிறுவனமும் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதற்கான புகார்களை மறுத்துள்ளது.

தவறான புகார்களை தெரிவிப்போர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக பெகாசஸ் செயலியை சந்தைபடுத்தும் இஸ்ரேலின்என்.எஸ்.ஓ நிறுவனமும் தெரிவித்துள்ளது. இந்நிலையை தொடர்ந்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதன் காரணமாக மதியம் வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பின்னர் மீண்டும் நிலைமை சரியானதன் காரணமாக மாலை 3.30 மணிக்கு மக்கள் அவை கூடிய போது மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். மத்திய நாடாளுமன்றத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலையிட்டு அனைத்து விவாதங்களும், விவாதிக்க தயார் எனவும் எதிர்க் கட்சியினர் தங்களது அமலிகளை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதன் அடிப்படையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தொலைபேசியில் ஒட்டு கேட்பு புகார் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் இவ்வாறு கூறினார். ஊடகங்களில் வெளிவந்து இருக்கும் தகவல் உண்மையல்ல என்றும், மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என்றும் கூறினார். மேலும் மென்பொருள் நிறுவனம் எந்தெந்த நாடுகளில் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது என்று வெளியிடப்பட்டிருக்கும் தகவல் தவறு எனவும் கூறியிருக்கிறார்.

ஆகவே அந்தப் பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை என்றும் மறுக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மூலமாக யாருடைய அலைபேசியை, யாராவது உளவு பார்த்து இருந்தால் அதை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்த பின்னரே உளவு பார்க்க முடியும். அப்படி இல்லாத சூழ்நிலையில் இது போன்ற குற்றச்சாட்டுகள் அர்த்தம் இல்லாதது என்றும் கூறினார். மேலும் அவர் ஒருவருடைய கைபேசியை உளவு பார்க்க வேண்டும் என்றால், மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகள் உள்ளது.

அந்த விதிமுறைகளை மீறி மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாரையும் உளவும் பார்க்கவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியால் மக்களவை, மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.