இரவில் கொழுந்துவிட்டு எரிந்த தீ! தீயணைப்பு துறையினர் வராததற்கு இது தான் காரணமா?
கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் சிதம்பராபுரத்தில் செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்ட பின்னர் இங்குள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் திடீரென குப்பை கிடங்கில் லேசாக தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. நேரம் செல்ல,செல்ல தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. குப்பைகள் கொட்டப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் தீ பிடித்து எரிந்த காரணத்தினால் அதிக உயரம் வரை தீ ஜூவலைகள் கருப்புகையுடன் எரிந்தது. இதனால் அப்பகுதி வழியாக சிதம்பராபுரத்திற்கு செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் குப்பை கிடங்கில் தொடர்ந்து தீ எரிந்து கொண்ட இருந்த காரணத்தினால் கரும்புகையினால் கோவில்பட்டி – எட்டயபுரம் சாலையில் வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. குப்பை கிடங்கில் தீ எரிந்த நிலையில் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க செல்லவில்லை.
இது குறித்து தீயணைப்பு நிலையத்தில் கேட்ட போது, தங்களுக்கு தீ பிடித்துள்ளது பற்றிய தகவல் வரவில்லை என்றும், மேலும் அடிக்கடி அந்த குப்பை கிடங்கில் அங்குள்ளவர்களே தீ வைத்து விடுவதாகவும் தெரிவித்தனர். அடிக்கடி அந்த குப்பை கிடங்கில் தீ பிடித்து பல மணி நேரம் எரிவதும், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் செல்வதும் வாடிக்கையாகி விட்டது. எனவே தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.