மாணவர்களின் உயிரோடு மத்திய அரசு விளையாடுகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய கோரி எத்தனையோ முறை மத்திய அரசிடம் தெரிவித்து அதற்கான முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்தே “நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என்பது தான் என்று புதுச்சேரி முதல்வர் பரபரப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
நீட் தேர்வுக்கு பயந்து நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.
மதுரையைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது மகள் ஜோதி துர்கா. நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் மனம் உடைந்து நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ஆதித்யா நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.மேலும், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த முருகேசன் மகன் மோதிலால், நேற்று இரவு 9 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஒரே நாளில் 3 மாணவர்கள் நீட் தேர்வின் அச்சத்தால் பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ” மத்திய அரசு மாணவர்களின் உயிரோடு விளையாடுகிறது.நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி எத்தனையோ முறை மத்திய அரசிடம் கூறினேன். அவர்கள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. இப்பொழுது கஷ்டப்படுபவர்கள் பெற்றோர்களும் மாணவர்களும் தான்.
மத்தியில் ராகுல் காந்தி காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்தே நீட் தேர்வை ரத்து செய்யப்படும் என்ற கையெழுத்தாக தான் இருக்கும்”. என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.