மின் கட்டண உயர்வு விவகாரம் குறித்த நூற்பாலைகள் சங்கத்தின் மேல்முறையீடு மனு நாளை விசாரணை
மின் கட்டண உயர்வு விவகாரம் தொடர்பான நூற்பாலைகள் சங்கத்தின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
நூற்பாலைகள் சங்கம், சில நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கும், கருத்து கேட்பு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்தது.
இதற்கு எதிராக தமிழக மின் வாரியம் சார்பில் தாக்கல் செய்த மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு கடந்த1-ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது.
மேல்முறையீடு மனு தொடர்பாக எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆமையம் முடிவு எடுப்பதற்கு இருந்த தடை தற்காலிகமாக நீங்கியது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து நூற்பாலைகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே. மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை விசாரிக்கிறது.