சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 5 கட்டமாக அகழ்வாய்வு நடந்தது.தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் விதமாக பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
மீண்டும் பிப்.19-ம் தேதி முதல் தமிழக தொல்லியல்துறை சார்பில் 6-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இப்பணி கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் நடந்து வருகின்றன.
கீழடியில் ஏற்கனவே 5-ம் கட்ட அகழாய்வில் கணடறியப்பட்ட செங்கல் கட்டுமான தொடர்ச்சி 6-க் கட்டத்திலும் கண்டறியப்பட்டது. மேலும் மற்றொரு குழியில் இரும்பு உலை கண்டறியப்பட்டது.
அந்த குழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழிகளில் பல்வேறு அளவுகளில் வெவ்வேறு நாட்களில் இதுவரை கருங்கல்லால் ஆன 4 எடைக்கற்கள் கண்டறியப்பட்டிருகிறது.
அந்த தேதிகள் பின்வருமாறு:
ஜூன் 20ஆம் தேதி 1.5 மீட்டர் ஆழத்தில் 8 கிராம் எடை கல்லும்
ஜூன் 25ஆம் தேதி 1.22 மீட்டர் ஆழத்தில் 18 கிராம் எடைக் கல்லும்
ஜூன் 24 ஆம் தேதி 1.5 மீட்டர் ஆழத்தில் 150 கிராம் எடைக்கல்லும்
ஜூலை 03ஆம் தேதி 1.5 மீட்டர் ஆழத்தில் 300 கிராம் எடைக் கல்லும் கண்டறியப்பட்டது.
இந்த எடைக்கற்கள் நான்கும் அடிப்பகுதியில் தட்டையாகவும் மேலே பளபளப்பாகவும் கருப்பு நிறத்திலும் காணப்படுகின்றன.
0.61 மிமீ ஆழத்தில் உலை குழியில் கிடைத்த இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் ஆகியவை இப்பகுதி தொழில் கூடமாக செயல்பட்டிருக்கலாம் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.
மேலும் எடைக் கற்கள் மூலம் இப்பகுதியில் வணிகமும் நடைபெற்றிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இந்த எடை கற்களின் அளவு 8 கிராமிலிருந்து 300 கிராம் வரைதான் என்பதால், உலோகப் பொருட்களை எடைபோட இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறனர் ஆராய்ச்சியாளர்கள்.