இறுதிகட்டத்தை நெருங்கும் ஐபிஎல் தொடர்! இன்றைய போட்டியில் வென்று பிளே ஆப் செல்லுமா குஜராத் டைட்டன்ஸ்!
இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இன்று ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகின்றது.
இதுவரை நடப்பு ஐபிஎல் தொடரில் 61 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. இருந்தும் எந்தவொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு இன்னும் தகுதி பெறவில்லை. இன்று நடக்கும் போட்டியில் குஜராத் டைட்டன் அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். தோல்வி அடையும் பச்சத்தில் முதல் இரண்டு இடங்களை குஜராத் டைட்டன்ஸ் அணி இழக்கும் வாய்ப்பு உள்ளது. மறுபுறம் புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இன்றைய போட்டி மட்டுமில்லாமல் இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்து சன்ரைசர்ஸ் அணியின் பிளே ஆப் வாய்ப்பு அமையும்.
இதனால் இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதும் இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அஹமதாபாத்தில் நடைபெறுகிறது. இன்று நடக்கும் இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஊதா நிற ஜெர்சி அணிந்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.