நகைச் சீட்டில் மோசடி செய்த பிரபல நகைக்கடை:! பணத்தைக் கொடுத்துவிட்டு பரிதவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்!!
தாராபுரத்திலுள்ள பிரபல தொழில் குழுமமான வெங்கட்ராம் செட்டியார் சன்ஸ் நிறுவனங்களின் ஒரு அங்கமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நகைக்கடை ஒன்று தொடங்கப்பட்டது. தாராபுரத்தில் வெங்கட்ராம செட்டியார் சன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தியேட்டர்கள் திருமண மண்டபங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றது. பலராமன் மற்றும் ஹரி என்பவர்கள் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆவர்.
நிறுவனத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நகைக்கடையை பிரபல நடிகை ஓவியாவை வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர்.
இதுமட்டுமின்றி தங்கள் கடையில் நகைச் சீட்டு போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் கார்,பைக்,தங்கம், மற்றும் வெள்ளி நாணயங்கள், ஸ்கூட்டி,போன்றவற்றை பரிசாக தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். மேலும் நடிகை நிக்கி கல்ராணி,பிக்பாஸ் சிவானி ஆகியோர்களை நகை கடைக்கு வரவழைத்து,
வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளையும் வழங்கியுள்ளது அந்நிறுவனம்.
இதையெல்லாம் பார்த்து நம்பிய ஆயிரக்கணக்கான மக்கள்,ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை நகைச் சீட்டில் முதலீடு செய்து வந்தனர்.இந்நிலையில் சில நாட்களாக நகை கடை மூடப்பட்டிருந்தது.இதனால் மக்களிடையே சந்தேகம் எழுந்த நிலையில்,நகைக்கடை உரிமையாளர்கள் குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் பரவிய நிலையில்,நகை கடை முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது மட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
வெங்கட்ராமன் செட்டியார் சன்ஸ் என்ற பாரம்பரிய பெயரை நம்பி நகைக்கடை அதிபருக்கு,சுமார் ஒரு கோடி முதல் மூன்று கோடி ரூபாய் வரை அரசியல் பிரமுகர்கள் கடன் கொடுத்ததாகவும்,
அதுமட்டுமின்றி சென்னை, கோவை,மதுரையைச் சேர்ந்த மொத்த தங்க நகை வியாபாரிகளும் ஹரிக்கு கிலோ கணக்கில் கடனாக தங்கமும் கொடுத்துள்ளனர்.
கடனாக பெற்ற பணத்தையும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களுக்கான பணத்தையும் நகைக்கடை உரிமையாளர் ஹரி திருப்பி தராமல் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.மேலும் இவர்களும் ஹரியை தேடி வந்துள்ளனர்.சுமார் 15 கோடி ரூபாய் வரை ஹரி நஷ்டம் அடைந்ததாக தகவல்கள் கூறப்படுகின்றது.
இந்நிலையில்தான் திருச்சியில் உள்ள துடையூரில் தலைமறைவான ஹரி,மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களான தந்தை,தாய் மனைவி,மற்றும் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.தற்போது ஹரியின் குடும்பத்தினர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் நகைச் சீட்டு என்ற பெயரில் முதலீடு செய்த பணம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.