தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் கடையில் மது விற்பனை தடை கோரிய வழக்கு!! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Photo of author

By Savitha

தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் கடையில் மது விற்பனை தடை கோரிய வழக்கு!! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், சமீபத்திய ஆய்வில், 15 முதல் 17 வயதுடைய மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் 50 சதவீதம் பேர் மது அருந்துவது தெரிய வந்துள்ளதாகவும், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மது விற்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை மீறி 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்றவர்கள் தண்டிக்கப்படவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னையில் 4 இடங்களில் தானியங்கி மது விற்பனை இயந்திரங்களை அமைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 800 இடங்களில் இந்த இயந்திரங்களை அமைக்க உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 21 வயது பூர்த்தியடையாதவர்கள் எளிதில் மதுவைப் பெற வகை செய்து விடும் என்பதால், தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது விற்க தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்க கூடாது எனவும், அதை மீறுவோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், டாஸ்மாக் கடைகளுக்குள் தான் இந்த தானியங்கி விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அங்கு யார் வேண்டுமானாலும் மது வாங்கலாம் என்ற தவ்றான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த தானியங்கி மது விற்பனை இயந்திரங்களில் மது பெற வருபவர்களை கண்காணிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கப்பட மாட்டாது எனவும் இதுசம்பந்தமாக சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசுத்தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.