அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்து சாதனை படைத்த ஒரே நபர்! – மேட்டுர் பத்மராஜன்!
சேலத்தைச் சேர்ந்த பத்மராஜன் என்ற நபர் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு தோற்றார். அதற்காக சான்றிதழ் வாங்கி அதற்கான பெருமையை படைத்துள்ளார். இவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள குஞ்சாண்டியூரில் இருக்கிறார். இவர் அனைத்து தேர்தல்களிலும் கலந்துகொண்டு ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாமல் தோல்விகளையே சந்தித்து உள்ளார். இவர் 1988 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் இவர் உள்ளாட்சித் தேர்தல் முதல் மாநிலங்களவை தேர்தல்கள் வரை அனைத்திலும் பங்கு கொண்டுள்ளார். மேலும் பல வி.ஐ.பி க்களை எதிர்த்து மனு தாக்கல் செய்தும் வந்துள்ளார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் வார்டு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற்றதில்லை இருந்தாலும் ஜனநாயகம் என்பது அனைவருக்கும் சமம் என்ற காரணத்திற்காக எல்லா தேர்தல்களிலும் அவர் போட்டியிடுகிறார்.
இதனை ஊக்குவிக்கும் வகையில் லிம்கா சாதனை புத்தகம் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்ற அமைப்புகள் சாதனை படைத்தவர் இன் எண்ணிக்கையில் இவரையும் சேர்த்துள்ளனர். அந்த வகையில் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வியுற்ற ஒரே நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். டெல்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து தேர்தல் மன்னன் பத்மராஜன் கூறுகையில் விஐபிக்களை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.
தேர்தலில் நின்றால் சாமானிய மக்களுக்கு வரும் உருட்டல், மிரட்டல், கேலி என அனைத்தையும் தாங்கிக் கொண்டுதான் நானும் இதை செய்து வருகிறேன். 50 லட்சம் வரை டெபாசிட் தொகையாக கட்டிய பணம் மட்டுமே செலவாகியுள்ளது. வெற்றி பெற்றவர்களை மட்டுமே இந்த உலகம் பார்த்து, பாராட்டி வருகிறது. ஆனால் தோல்வி அடைந்தவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை ஊக்கப்படுத்த இந்த புத்தகங்களில் எனது பெயர் இடம் பெற்றுள்ளது. இதுபோல இன்றைய இளைஞர்கள் தோல்வியைக் கண்டு மனம் தளராமல் வெற்றிபெற உறுதியோடு போராட வேண்டும். வெற்றிக்கு தோல்வியே முதல் படி என்பதை யாரும் மறக்கக்கூடாது என்றும் கூறினார்.