தாலுகா திறப்பு முதலமைச்சர் கையில்.. அங்கிருந்த கல்வெட்டு எடப்பாடி பெயரில்! இரவோடு இரவாக மர்ம நபரின் சித்து விளையாட்டு!
முன்னாள் முதல்வர் எடப்பாடி இருந்த ஆட்சியில்,நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை பகுதியை மையமாக வைத்து தாலுக்கா அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்தனர்.அவர்கள் கோரிக்கை வைத்ததன் பெயரில், எடப்பாடி ஆட்சி காலத்திலேயே புதிய தாலுக்கா அலுவலகம் கட்டுவதற்கு பணிகள் நடைபெற்றது. பணிகள் நடைபெற்ற காரணத்தினால் 2018 ஆம் ஆண்டு, தற்காலிகமாக ஓர் வாடகை கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வந்தது.
அதனையடுத்து மூன்று கோடி செலவில் புதிய தாலுக்கா அலுவலகமானது எடப்பாடி ஆட்சியிலேயே கட்டி முடித்தனர். இந்த அலுவலகம் திறப்பு விழா நடப்பதற்கு முன்பாகவே சட்டமன்ற தேர்தல் நடந்து, ஆட்சியும் மாறிவிட்டது. இந்நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த தாலுக்கா அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இவ்வாறு அலுவலகத்தை திரு மு க ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், நேற்று இரவு புதிதாக திறக்கப்பட்ட தாலுகா அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பெயரிடப்பட்ட கல்வெட்டை பதித்து சென்றுள்ளனர்.முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பெயர் பொறித்த கல்வெட்டை பார்த்து அலுவலர்கள், வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வருவாய் துறை அதிகாரிகள் அங்கிருந்து கல்வெட்டை நீக்கினர். மேலும் இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கல்வெட்டை பொறித்த அந்த மர்ம நபர் யார் என்று விசாரணை செய்து வருகின்றனர்.