பைனான்ஸ் கம்பெனி அதிபர் கொலையில் தொடர்புடையவர்களை சுட்டு பிடித்த போலீசார்!
பெங்களூரில் வில்சன் கார்டன் அருகில் லக்கசந்திரா பகுதியில் வசித்து வந்தவர் மதன். 33 வயதான இவர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் உரிமையாளராகவும் உள்ளார். இவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி காலை மதன் தனது காரில் வெளியே சென்றுவிட்டு, பனசங்கரி கோவில் அருகே கட்டப்படும் மெட்ரோ பாலம் அருகே வந்திருந்தார். அதன் பின் காரை நிறுத்திவிட்டு காய்கறிகளை வாங்கிக்கொண்டு மீண்டும் காரின் அருகே வந்த போது மதன் வந்தார்.
அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் நீண்ட வால் உள்ளிட்ட ஆயுதங்களால் மதனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்து விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி அறிந்த ஜெயநகர் போலீசார் தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
மேலும் கொலையாளிகளை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் மதன் கொலையில் தொடர்புடைய ரவுடி ஒருவரின் கூட்டாளிகளான மகேஷ் மற்றும் நவீன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சாந்தி நகரில், ரவுடிகள் விஜய் மற்றும் லிங்கா கொலை செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் கொலைக்கு மதன் நிதி உதவி செய்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக மதன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிந்து கொண்டனர். இந்தநிலையில் மதனை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை உத்தரஹல்லி அருகே பதுக்கி வைத்திருப்பதாக மகேஷ் மற்றும் நவீன் ஆகியோர் தெரிவித்திருந்தனர். இதனால் அந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய நேற்று காலை மகேஷ் மற்றும் நவீன் ஜெயநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதர்சன், சப் இன்ஸ்பெக்டர் சந்தன் காலே, உதவி சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆச்சார் தலைமையிலான போலீசார் நாககவுடனபாளையாவுக்கு அழைத்துச் சென்று இருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் 2 பேரும் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டு, கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சந்தர்ப்பத்தில், போலீசாரிடம் இருந்து ஆயுதங்களை மகேஷ் மற்றும் நவீன் பறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அவர்களின் கைகளில் காயங்கள் ஏற்பட்டது.
இதனை பார்த்த மற்ற போலீசார் அதிர்ச்சி அடைந்து அவர்கள் சுதாரிப்பதற்குள் மகேஷும் நவீனும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் சுதர்ஷன் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு சரணடைந்து விடும்படி இருவரையும் எச்சரித்தார். ஆனால் அவர்கள் சரணடைய மறுத்ததுடன் மீண்டும் திரும்பி போலீசாரை தாக்க வந்தனர்.
இதனால் இன்ஸ்பெக்டர் சுதர்ஷன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை கொண்டு அவர்களை நோக்கி சுட்டார். இதில் நவீனின் வலது காலிலும், மகேஷின் இடது காலிலும் குண்டு துளைத்து அவர்கள் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து ஆம்புலன்ஸ் மூலம் ஜெயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதுபோல அவர்கள் தாக்கியதில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த சம்பவம் குறித்து ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிபர் கொலை வழக்கில் கைதான 2 பேரையும் சுட்டு பிடித்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.