Jananayagan: நடிகர் விஜய் கோட் படத்தில் நடித்து கொண்டிருந்த போதே அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டார். கடந்த சில வருடங்களாகவே கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடந்து வந்தது. பல மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னரே அரசியலுக்கு வருவதாக அறிவித்தார் விஜய்.
இப்போது ஒப்புக்கொண்டிருக்கும் படத்தில் நடித்துவிட்டு அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்த விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி எனவும் கூறினார். இதுதான் திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, விஜயை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். ஒருபக்கம் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியம், கனிமொழி, சபாநாயகர் அய்யாவு உள்ளிட்ட பலரும் விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை. அவர் இன்னமும் மக்களை சந்திக்கவே இல்லை. கட்சி துவங்கி இரண்டு வருடங்கள் ஆகியும் 4 சுவருக்குள்ளேயே அரசியல் செய்து வருகிறார் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். ஆனால், விஜய் இதற்கெல்லாம் விளக்கமே கொடுப்பதில்லை. ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்துவிட்டு தீவிர அரசியலிலும் அவர் இறங்கவிருக்கிறார்.
ஜனநாயகன் படம் பாலையா நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. ஆனால், அதில் அரசியல் இருக்காது. ஆனால், தமிழில் விஜய் நடிப்பதால் அரசியல் தொடர்பான காட்சிகள் படத்தில் இடம் பெறுகிறது என்கிறார்கள். மேலும், இந்த படத்தில் வாக்குகள் என்பது எவ்வளவு முக்கியம் என்றும் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் விஜய் பேசவுள்ளதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது.