நாயுடு vs கவுடா நீர்வளத்துறை அமைச்சர் பதவிக்கு பேரம்!! தத்தளிக்க போகும் தமிழகம்!!
Cauvery and Palar Issue in tamil: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனி பெரும்பான்மையை இழந்த பாஜக தற்போது 16 இடங்களை வென்ற ஆந்திராவின் தெலுங்கு தேசம், 12 இடங்களை வென்ற பீகார் ஜேடியூ மற்றும் 2 இடங்களை வென்ற கர்நாடகாவின் ஜேடிஎஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது.
கடந்த முறை 303 இடங்களில் வென்று தனி பெரும்பான்மை கொண்ட கட்சியாக ஆட்சி அமைத்த பாஜக கட்சி தற்போது 240 இடங்களை மட்டும் வென்று தனிப்பெரும்பான்மை இழந்துள்ளது. இதனால் மத்தியில் மைனாரிட்டி ஆட்சி அமைக்க வேண்டிய நிலையில் பாஜக அரசு உள்ளது. இது பாஜக அரசுக்கு மிகப்பெரிய தோல்வியாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஆதரவு கட்சிகளோடு ஆட்சி அமைக்க உள்ள பாஜக தலைவர் மோடியிடம் தற்பொழுது இருந்தே மத்திய அமைச்சர் பதவிகளுக்கான பேரங்கள் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சியும், கர்நாடகாவில் 2 தொகுதிகளை வென்ற குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியும் அவரவர்களுக்கான அமைச்சர் பதவிகளை கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி தெலுங்கு தேசம் கட்சி மக்களவையில் சபாநாயகர் பதவி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பதவிகளையும், நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி வேளாண் துறை அமைச்சர் பதவியும் மற்றும் 4 கேபினட் அமைச்சர் பதவிகளையும், 2 தொகுதிகளை வென்ற கர்நாடகாவில் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி நீர்வளத்துறை மற்றும் வேளாண் துறை அமைச்சர் பதவிகளையும் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக தனி பெரும்பான்மையாக வெற்றி பெற்ற நிலையில் பாஜக கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெறவில்லை. இது ஒருபுறம் இருக்க, தமிழகத்திற்கு காலம் காலமாக இருந்து வரும் மிகப்பெரிய பிரச்சனை காவிரி நதிநீர் உரிமையும் மற்றும் பாலாறு உரிமையும் என்னவாகப் போகிறது என்று தமிழக மக்களிடையே பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
தற்போது கர்நாடகாவில் ஜேடிஎஸ் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வரான குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார். கர்நாடகாவில் முக்கிய பகுதிகளான மண்டியா, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்வாக்கை இழந்த ஜேடிஎஸ் கட்சி தற்போது காவிரி நதிநீரில் விவசாயம் செய்யும் மண்டியா, மைசூர் விவசாயிகளின் செல்வாக்கை திரும்ப பெற வேண்டும் என்பதற்காகவே, தற்பொழுது பாஜக அரசிடம் நீர்வளத்துறை மற்றும் வேளாண் துறையை குமாரசாமி கேட்டு வருகிறாராம்.
காவிரி நதிநீர் உரிமை பிரச்சனை
மேலும் கர்நாடகாவில் முன்னால் முதல்வர் குமாரசாமியிடம் நீர்வளத்துறை அமைச்சர் பதவி கிடைத்து விட்டால் அவர்களுக்கு சாதகமாக காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டி முடித்துவிடுவர். இதனால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய காவிரி நதிநீர் உரிமையானது கர்நாடகா அரசால் கிடைக்காமலே போய்விடும். மேலும் தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் உரிய காவிரி நீர், உரிய காலத்தில் கர்நாடக அரசு திறந்து விடுமா என்பதும் பெரும் சந்தேகம் தான்.
பாலாறு உரிமை பிரச்சனை
பாலாற்றின் நடுவே தடுப்பணைகளை கட்டி வைத்திருக்கிறது ஆந்திர அரசு. தெலுங்கு தேசம் கட்சியில் ஒருவருக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவி கிடைத்துவிட்டால் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு பாலாற்றின் உரிமை தமிழ்நாட்டிற்கு இனி இல்லை என்ற நிலைமை உருவாகி விடும்.
எனவே பாலாறு மற்றும் காவிரி விவகாரத்தில் இந்த இருகட்சிகளின் கைகளில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பதவி கிடைத்தால் தமிழ்நாட்டிற்கு பெரும் சிக்கலை உருவாக்கி விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஒரு தொகுதிளில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. எனவே தமிழ்நாட்டின் உரிமைகளை மத்தியில் உள்ள அரசிடம் பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும் படிக்க: என் அப்பா அரசியல்வாதி அல்ல.. ஆடு மேய்ப்பவர்!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்!!