கிராம சபை கூட்டத்தில் குறைகளை தெரிவித்த பொதுமக்கள்! நைசாக நழுவிய அமைச்சர்!

Photo of author

By Sakthi

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிமுகவின் ஒன்றிய கவுன்சிலர், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது. ஆகவே கூட்டம் முடிவதற்கு முன்பாகவே வேறு கிராம சபை கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்துவிட்டு அமைச்சர் பாதியிலேயே நழுவியதாக சொல்லப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றுக் கொண்டார்கள். சிறப்பு விருந்தினராக பங்கேற்றுக் கொண்ட பொன்முடி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அந்த சமயத்தில் குறிப்பிட்டு பேசிய அதிமுகவின் ஒன்றிய கவுன்சிலர் ரேவதி நான் ஒரு ஒன்றிய கவுன்சிலர் இந்த ஊராட்சி நிர்வாகத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறதா? இல்லையா? கிராமத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் என்னிடம் தகவல் கூறுவதில்லை, எந்த வேலையையும் எனக்கு வழங்குவதில்லை என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் பொன்முடி இது ஊராட்சி மன்ற தலைவருக்கும், ஒன்றிய கவுன்சிலருக்குமான பிரச்சனை இது இது தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க முடியாது. பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளை பற்றி பேசட்டும் நீங்கள் அமருங்கள் என்று தெரிவித்து பொதுவான குறைகள் இருந்தால் தெரிவியுங்கள் என்று பொதுமக்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.

குடிநீர், 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் முன்வைத்தனர் இதற்கு தொடர்புடைய அதிகாரிகளை அழைத்து பதில் கூறுமாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பொன்மொழி பக்கத்து கிராமமான ஆதிச்சனூரில் நிகழ்ச்சி இருப்பதால் அங்கே செல்கிறேன் நிகழ்ச்சியை அதிகாரிகள் தொடர்பு நடத்துவார்கள் என்று தெரிவித்து கூட்டத்திலிருந்து பாதியிலேயே புறப்பட்டு சென்றார்.