அண்டை மாநில இளைஞர்களால் தான் கலவரம்!! ஓசூர் ஆரவாரம் குறித்து மாவட்ட எஸ் பி விளக்கம்!!
ஓசூர் அருகே கோபச்சந்திரத்தில் நடந்த எருது விடும் விழாவில், அண்டை மாநிலம் வாலிபர்கள் மாடுகளுடன் வந்ததே பிரச்சனை ஏற்பட காரணமாக அமைந்ததாக மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாக்கூர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் இன்று கூறுகையில், நேற்று நடந்த எருது விடும் விழாவில் நிர்வாக குளறுபடிகள் எதுவும் இல்லை.
விழா நடத்துபவர்கள் தகுந்த சான்றிதழை அளிக்க தாமதமானதால் இளைஞர்கள் பிரச்சினையில் ஈடுபட்டனர். உள்ளூர் பொதுமக்கள் யாரும் பிரச்சனையில் ஈடுபடவில்லை. உள்ளூர் மாடுகள் மட்டுமே எருது விடும் விழாவில் பங்கேற்க வேண்டும் என்பது விதி. அதை தவிர்த்து அண்டை மாநில வாலிபர்கள் தங்கள் மாடுகளுடன் வந்தனர்.
அவர்கள் எருது விடும் விழா நடத்த தாமதமானதாக கூறி சாலையில் மறியல் செய்தும், தடுக்கச் சென்ற போலீசாரை தாக்கியும், பெண் போலீசாரிடம் அத்துமீறியும் நடந்தனர். அதை தவிர்க்கவே அந்த வாலிபர்களை பிடித்து அமர வைத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.
4,000க்கும் மேற்பட்டோர் கூடிய இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 200 போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது பாராட்டத்தக்கது. எருது விடும் விழா நடத்துபவர்கள் விழாவிற்கு முந்தைய நாளே அனைத்து சான்றிதழ்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். அதுபோல செய்தால் பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
வெளி மாநில மாடுகள் எருது விடும் விழாவில் கலந்து கொள்வதை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தாக்குதலில், அரசு உடைமைகள் சேதமாகின. போலீசாருக்கு காயம் ஏற்பட்டது ஆனால் பொது மக்கள் யாரும் காயம் அடையவில்லை என்றார்.
மேலும் சமூக வலைத்தளங்களில், தான் இளைஞர்களை காலால் உதைத்த வீடியோ பரவி வருகிறது. அவர்கள் அங்குள்ள பெண் போலீசார் மற்றும் பொதுமக்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் தான் அவர்களை பிடித்து அமர வைத்தோம்.
ஆனால், அவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பித்துக் கொண்டே இருந்தனர் அதன் பிறகு தான் அப்படி நடந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் டாக்கூர் தெரிவித்தார்.